ஐஜிக்கே அபராதம் விதித்த காவலர்

ஜிக்கே அபராதம் விதித்த காவலர்

பெங்களூர், ஜன.15: சாலையில் போக்குவரத்து விதியை மீறியதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலே அபராதம் கட்ட நேரிட்டது. இந்தச் சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதன் விவரம் வருமாறு:

கர்நாடக மாநில மனித உரிமை பாதுகாப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிபின் கோபால் கிருஷ்ணா. அவர் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியாவார். அவர் பெங்களூர் பிரிகேட் சாலை சந்திப்புக்குச் செல்வதற்காக சர்ச் தெருவில் இருந்து ஒரு தனியார் காரில் வலதுபுறம் திரும்பி எம்ஜி சாலைக்குள் நுழைந்தார்.

ஆனால் போக்குவரத்து விதிப்படி அப்படி வலப்புறம் திரும்பி எம்ஜி சாலைக்குச் செல்லக்கூடாது. இந்த விதிமீறலைக் கண்டதும் போக்குவரத்துப் பிரிவு காவலர் ஒருவர் ஓடிவந்து, காரில் வந்திருப்பது ஐஜி என்று தெரியாமலேயே அவரது காரை நிறுத்தினார்.

இப்படி விதியை மீறி காரை ஓட்டிவந்ததற்காக அபராதம் கட்டுமாறு ஐஜயிடம் கூறினார்.

உடனே காரை விட்டு இறங்கிய ஐஜி பிபின், நிதானமாக அருகில் நின்றுகொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுலுவை அணுகினார். சாலைத் திருப்பத்தில் திரும்பக்கூடாது என்ற விதியைக் குறிக்கும் போர்டு வைக்கப்படவில்லையே? இது தெரியாமல் காரை ஓட்டியதற்காக நான் அபராதம் செலுத்தவேண்டுமா என்று ஐஜி பிபின் எஸ்ஐயிடம் கேட்டார்.

எஸ்ஐக்கும் வந்திருப்பது ஐஜி என்று தெரியாது. எனவே போலீஸôருக்கே உள்ள தொனியில் இப்படித்தான் எல்லோரும் கேட்கிறார்கள். எனவே வாதம் செய்யாமல் தயவு செய்து கட்டுங்கள் அபராதத்தை என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டார்.

இதனால் திகைத்துப்போன ஐஜி பிபின், அருகில் இருந்த ஒருவரை அழைத்து கிழக்குப் பிராந்திய போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையரைத் தொடர்புகொள்ளுமாறு கூறினார். இதற்குள் அப் பகுதியில் வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் கூட்டம் கூடிவிட்டது.

பிபினும் செய்வறியாது திகைத்து நின்றார்.

அப்போது அப்பகுதியில் தற்செயலாக வந்த ஓர் ஆட்டோக்காரர் சிக்கலில் மாட்டியிருப்பது வேறு யாருமில்லை, ஐஜிதான் என்பதை அடையாளம் கண்டுகொண்டார். நைசாக எஸ்ஐயிடம் சென்று விஷயத்தைக் காதில் போட்டார்.

ஓர் ஆட்டோக்காரருக்குத் தெரிந்த விஷயம்கூட தமக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று நொந்துபோன எஸ்ஐ வேறு வழியின்றி ஐஜியிடம் வந்து நடந்ததற்கு மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் மக்கள் கூட்டமும் கூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை உணர்ந்த ஐஜி பிபின் வேறு வழியின்றி பையில் இருந்து பணத்தை எடுத்தார். அபராதம் எவ்வளவு என்று கேட்டார். எஸ்ஐ கோவிந்தராஜுலு தயங்கித்தயங்கிக் கூறிய தொகையைச் செலுத்தினார்.

உடனே அந்த இடத்தில் இருந்து காரில் பறந்துவிட்டார்.

போகிறபோக்கில் காவலர்களின் நேர்மையைப் பாராட்டவும் தவறவில்லை ஐஜி பிபின். நல்லவேளையாக, மாமூல் கேட்காமல் முறையாக அபராதம் செலுத்துமாறு கூறியதால் காவலர்கள் இருவரும் தப்பினர். நல்ல பெயரும் கிடைத்துவிட்டது.

பின்னூட்டமொன்றை இடுக